வடவள்ளி அருள்மிகு ஸ்ரீ பூமாதேவி ஸ்ரீ நீளாதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் சுவாமி திருக்கோவில் தல வரலாறு.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வடதேசத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நமது தேவாங்க சமூக வம்சாவளியைச் சேர்ந்த முன்னோடிகள் வடவள்ளி என்ற கிராமத்திற்கு வந்து வளமாக வாழ்ந்து வந்தனர். அவர்களில் அகஸ்தியர் மகரிஷி கோத்திரம், லத்தேகாரர் வம்சம் சார்ந்த ஜனங்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக அருள்மிகு ஸ்ரீ பூமாதேவி ஸ்ரீ நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிக்கு கர்ப்ப கிரகம் அமைத்து மற்றும் இரண்டு தாயார்களுடன் ஆஞ்சநேயர் விக்கிரகம் சேர்த்து பிரதிஷ்டை செய்து தங்கள் குலம் தழைக்கவும், தங்கள் வாழ்க்கை தழைக்கவும் மனப்பூர்வமாக மன சுத்தியுடன் வழிபட்டு வந்தனர்.
இதற்கு ஆதாரமாக வடவள்ளி மடமனை ஸ்தானிதர்கள் எஜமானர் கருப்பஞ் செட்டியார், பூசாரி சாமி செட்டியார், சமேதர் சவுண்டப்ப செட்டியார் என்று கோவிலில் உள்ள பழைய கல்வெட்டில் காணப்படுகிறது. அப்படி கோவில் கட்டி வழிபாடு செய்துவரும் காலத்தில் நமது முன்னோர்களுக்குள் ஏதோ தகராறு இருந்திருக்கிறது என்றும் அதைப் பேசி தீர்த்து உள்ளார்கள் என்பதும், அதன் பிறகு ஒன்று கூடி சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார்கள் என்பதும் கோயிலில் உள்ள புராதன கல்வெட்டின் வாயிலாக நாம் அறிகிறோம்.
இன்றைக்கு 450 வருடம் முந்தைய கல்வெட்டில் உள்ள செய்தி “கலியுக சகாப்தம் 4696 ஆம் ஆண்டு தமிழ் ஜய வருஷம் தை மாசம் இருபதாம் தேதி வியாழன்கிழமை சுபதினத்தில் வடவள்ளி மடமனை தேவாங்க வம்சம் கருப்பஞ்செட்டி, சாமி செட்டி இரண்டு பேரின் விவகாரம் தீர்த்து மாசி மாசம் 27 ஆம் தேதி சனிக்கிழமை எழுதிவைத்த கல்சாசனம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் வடவள்ளியில் அமைதியாய் வாழ்ந்து வந்த நமது தேவாங்க சமூக மக்களுக்கு, தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயம் வரும்படியான சூழ்நிலை ஒன்று எதிர்பாராதவிதமாக உருவானது.
அப்போது மைசூரை ஆட்சி செய்து வந்த மன்னர்கள் தமிழ்நாடு மீது படையெடுத்து வந்தார்கள் அந்தப் படையெடுப்பிற்கு பயந்து போய் நமது சமூக முன்னோடிகள் இரண்டு தாயார்களுடன் மூலவரையும், ஆஞ்சநேயரையும் சேர்த்து கோயில் அருகில் இருந்த கிணற்றில் ஒரு பொந்தில் மறைத்து வைத்துவிட்டு அவ்வூரில் இருந்து பல குழுக்களாக பிரிந்து பல ஊர்களில் குடியேறினார்கள். அந்த ஊர்களே நமது வம்ச கத்திகைகள் என்று பெருமையுடன் வழங்கப்படுகிறது.
அதன் பிறகு வந்த தலைமுறையினருக்கு தம் குலதெய்வ வழிபாடு பற்றிய போதிய விபரங்கள் தெரியாமல் இருந்ததால் அந்த பல கத்திகைகளில் பலமுறைகளில் குலதெய்வ வழிபாடுகளை செய்து வந்தார்கள். சில கத்திகைகளில் சக்தி கலசம் அமைத்தும், ஒரு சில கத்திகைகளில் கேல்கடிகை (மண்சட்டி) வைத்தும், வேறு சில கத்திகைகளில் தாசர் பந்தசேர்வை-கவ்வாளமாக வைத்தும் வழிபாடு செய்து வருகிறார்கள்.
ஆனால் அனைத்து கத்திகைகளும் ஒன்று சேர்ந்து, வடவள்ளியை மடமனை என்னும் தலைமைப் பீடமாக கொண்டு நடந்து வருகின்றன.