140 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை நடந்த சம்பவங்கள்.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் செம்மாண்டாம்பாளயத்தைச் சேர்ந்த திரு.கருப்பஞ் செட்டியார்  மனைவி திருமதி சவுண்டம்மாள் அவர்களின் கனவில் எம்பெருமாள் தோன்றி தாம் கிணற்றுக்குள் இருப்பதாகவும்,அந்த கிணற்றின் அடையாளமும் சொல்லி (நெடை பாம்பியில்) எம்மை அக்கிணற்றிலிருந்து எடுத்து நிலை நாட்டினால், உனக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் என்று வரமளித்து மறைந்தார். இந்த நிகழ்விற்குப்பின் நமது அண்ணன் தம்பிமார்கள் ஒன்றுகூடி வடவள்ளி சென்று அந்த ஊரிலுள்ளவர்கள் சொன்ன கிணற்றிலிருந்து நின்ற கோலத்திலிருந்த சுவாமியை வெளியே எடுத்து, அங்கேயே ஒரு கூரைசாலை மேய்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

 

அதன்பிறகு பலகாலம் கழித்து நமது குலதயாதிகள் ஒன்று சேர்ந்து கர்ப்பகிரகத்தைச் சீர்படுத்தி அதில் மூலவர்களை பிரதிஷ்டை செய்து, இன்றைக்கு 111 வருடங்களுக்கு முன்னால் கலியுக சகாப்தம் 5016, ஆனந்த வருடம் சித்திரை மாதம் 19-ஆம் தேதி கருவறை கர்ப்பகிரகம் முகூர்த்தம் செய்யப்பட்டு வழிபாடு செய்து  வந்துள்ளனர்.

சிறியளவிலிருந்த இக்கோவில் 1950- ஆம் ஆண்டு முதல் செம்மாண்டாம்பாளையம் கருப்பஞ்செட்டியார் வம்சாவளியினராலும், திருப்பூரில் குடியேறியிருந்த நமது தாயாதிகளின் விடாமுயற்சியினாலும் 22-2-1956-ஆம் ஆண்டு வடவள்ளி கோவிலில் அனைவரும் ஒன்றுகூடி பூசாரிப்பட்டம்   திரு சாமி செட்டியார் அவர்களுக்கும், எஜமானர் பட்டம் திரு கருப்பஞ்செட்டியார் அவர்களுக்கும் கட்டப்பட்டது.

அவர்களின் தொடர் முயற்சியால் 1961- ஆம் ஆண்டு தமிழ் பிலவ வருடம் சித்திரை மாதம் 9,10-ஆம் தேதிகளில் (21,22-04-1961) வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் 60 அண்ணன் தம்பிமார்கள் கூடி பெரியசாமி கும்பிடும் பெருவிழா முதன்முறையாக சிறப்பாக நடைபெற்றது.

அதன்பின்னர் 1967-இல் நமது கர்ப்பகிரக விமானகோபுரம் அமைக்கப்பட்டு தமிழ் பிரபாவருடம் தைமாதம் 9- ஆம் தேதி (22-1-1967) அன்று ஞாயிறு அன்று மிகச் சீரியமுறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே மடப்பள்ளியும், கோவில் சுற்றுசுவரும் கட்டப்பட்டது.

1961-ஆம் வருடம் பெரியசாமி கும்பிட்டதிலிருந்து ஒவ்வோர் வருடமும் சித்திரை மாதம் 10-ந் தேதி தீர்த்தகலசம் கொண்டு வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தாசர்கள் பந்தசேர்வையுடன் மாத்துக்கவாளம் எடுத்து நண்பகல் பெரியபூஜை நடைபெறும். இதுபோல ஒவ்வோர் வருடமும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை அன்றும் கார்த்திகை மாதம் விஷ்ணுஜோதியன்றும் பூஜைகள் நடைபெற்றன.

அதன்பின் சிலகாலம் கழித்து, அதிகமாக வரும் பக்தர்கள் தங்குவதற்காக கோவில் முன்புறம் மஹாமண்டபம் ஒன்றும் பெரிய பந்தல் ஒன்றும் அமைக்கப்பட்டது.

 1970-ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நாளாக இருந்த சித்திரை திருவிழா இரண்டு நாட்களாக மாற்றப்பட்டது. அந்த வருடம் முதல் சித்திரை பிரமோத்சவத் திருவிழா பிரதி வருடம் சித்திரை மாதம் 9 மற்றும் 10 -ஆம் தேதிகளில் இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரைத் திருவிழாவின்போது பெண்மக்கள் சிறப்பு சீராக வசூலித்துக்கொடுத்த தொகையைக்கொண்டு கன்னிமார் சிலைகளும் கோவிலினுள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1980-ஆம் ஆண்டு வாக்கில் அருள்மிகு ஸ்ரீ வடவள்ளி வரதராஜப் பெருமாள் சுவாமி பக்தஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த பக்தஜன சங்கம் நடத்திய சீட்டுப்பணத்தைக் கொண்டும், தாயாதிகள் அளித்த நன்கொடையைக் கொண்டும் 1982-1983 ஆண்டுகள் வாக்கில் கோவிலில் முன்புறம் உள்ள அர்த்தமண்டபம், மஹாமண்டபம், துவார பாலகர்கள், ஸ்ரீகணபதி, ஸ்ரீ ஆஞ்சனேயர், கருடாழ்வார், நாகர்கள் முதலிய விக்கிரகங்களும், மடப்பள்ளி அலுவலகம் முன் மதில்சுவர் ஆகியவைகள் கட்டப்பட்டு தமிழ் ருத்ரோத்காரி வருடம் சித்திரை மாதம் 12-ஆம் தேதி திங்கட்கிழமை (21-4-1983) அன்று மஹாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாகச் செய்விக்கப்பட்டது

1984-ஆம் ஆண்டு முதல் கோவிலில் சித்திரைத்திருவிழாவின் போது சுவாமிகளுக்குத் திருக்கல்யாணம் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

 அதன்பிறகு நமது தாயாதிகள் மற்றும் பெண்மக்கள் ஒன்றுகூடி அளித்த ஆதரவால் ஐம்பொன்னால் ஆன உற்சவமூர்த்திகளும், அகத்தியமகரிஷிக்கு விக்கிரகமும் செய்யப்பட்டு, தமிழ் குரோதன வருடம், பங்குனி மாதம் 14-ஆம் தேதி வியாழன்கிழமை (27-3-1986) மற்றும் வெள்ளிக்கிழமை (28-3-1986) ஆகிய இரு தினங்களில் கும்பாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு அகத்திய முனிவர் விக்கிரகம் மற்றும் உற்சவமூர்த்தி வடகளுக்கு ஜீரணோத்தரனம் செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில், கோவிலுக்கு தென்மேற்கில் கோவிலுக்கு இணையாக 7-9-1989 அன்று 113/4 சென்ட் பூமி கிரயம் செய்யப்பட்டு, இன்று அன்னதானக் கூடமாகவுள்ள இடத்திற்கு முழு மதில் சுவர், கழிப்பிடம் மற்றும் குளியலறைகள் கட்டப்பட்டன. சித்திரைத்திருவிழா மற்றும் மூன்றாம் சனிக்கிழமை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 1992 -ஆம் ஆண்டு முதல் சித்திரைத்திருவிழா முதல் நாள் 108 திருவிளக்கு பூஜை ஆரம்பம் செய்யப்பட்டது. 1992-ஆம் ஆண்டில் சித்திரைத்திருவிழா முடிந்தவுடன் 1993-ஆம் ஆண்டிற்கான பெரியசாமி கும்பிடும் விழாப் பணிகள் துவக்கப்பட்டன.

1993-ஆம் ஆண்டு தமிழ் ஸ்ரீமுக வருடம் சித்திரை 17, 18, 19, 20 (30-4-1993, 1, 2, 3 -5-1993) ஆகிய 4-நாட்கள் ஜீரண உத்தாரண சம்ரோச்சன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் 60 கூடி பெரியசாமி கும்பிடும் மிகப்பெரிய விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு இலட்சம் பேர் வரை விழாவில் கலந்து கொண்டனர் என்பது சிறப்பு.

4-6-1997-ஆம் தேதி அமாவாசை அன்னதான பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அரம்ப மாதம் முதல் இன்றைய மாதம் வரை இடைவெளியின்றி சுமார் 13-வருடங்கள் தொடர்ச்சியாக பிரதி அம்மாவாசை அன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

1998-1999 ஆம் ஆண்டுகளில் கோவில் முன்புறமுள்ள சிமெண்ட்ஷீட் வேய்ந்த மண்டபமும், ராஜகோபுரமும் கட்டப்பட்டது. 1999-ஆம் ஆண்டு தமிழ் பிரம்மாதி வருடம் சித்திரை மாதம் 17, 18, 19, 20 -ஆம் தேதிகளில் (30-4-99, 1, 2, 3-5-99) வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நேரத்தில் இராஜகோபுரத்தின் உட்பகுதியில் சூரியனாராயனார் சுதை சிற்பம் அழகாக  அமைக்கப்பட்டது. 

2000-2004-க்குள் நான்கு முறை இலவச கண் சிகிச்சை முகாம்களும், முழு உடல் பரிசோதனை முகாமும் நமது கோவிலில் நடைபெற்றன. 19-1-2006-ஆம் நாள் கோவிலின் வடமேற்கு பகுதியில் புஞ்சை0.90 ஏக்கர் பூமி கோவிலுக்காக கிரயம் பெறப்பட்டுள்ளது. 2006-ல் துலாபாரம் அமைக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு வாக்கில் ஜெனரேட்டர் வாங்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு சித்திரை பிரமோற்சவம் முடிந்ததும் 2012-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மஹாவிஷ்ணு, லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, வீரஆஞ்சனேயர் ஆகிய பரிவாரசுவாமிகளுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைத்தும், கன்னிமார் சுவாமிகள் கோவில் புதுப்பிக்கப்பட்டும் கும்பாபிஷேகம் 2012-ஆம் ஆண்டு சித்திரை மாதம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பிக்கப்பட்ட வருடம் முதல் இந்நாள் வரை சித்திரைத்திருவிழாவும், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை திருவிழாவும், கோகுலாஷ்டமி கொண்டாட்டங்க்களும், மார்கழிமாத வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.